இணைக்கப்பட்ட 23 சங்கங்களில் 25ஆயிரம் பேர் உறுப்பினர்களாக பல்லாண்டுகளாக திரைப்படத் துறையில் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த 25ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை சீர்அழிக்கும் விதமாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை சேர்ந்த சில நிர்வாகிகள் புதிதாக தமிழ்த் திரைப்படத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பை உருவாக்க முயல்கிறார்கள். தொழிலாளர்களின் வாழ்க்கையை அழிக்க முதலாளிகள் சிலர் இந்த புதிய தொழிலாளர்கள் அமைப்பை உருவாக்கு கின்றார்கள். இந்த கொடுமைக்கு எதிராக 14.5.2025 புதன் கிழமை அன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தமும், கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்த முடிவு செய்துள்ளோம். 14.5.2025 அன்று தமிழ்நாடு எங்கும் திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், வலை தொடர் (Web series) விளம்பரம், இது போன்ற எந்த படப்பிடிப்புகளிலும் சம்மேளன உறுப்பினர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள்.
ஏற்கனவே 50 ஆண்டுகளுக்கு மேலாக தொழில் செய்து வருகின்ற திரைப்பட தொழிலாளர்களின் வாழ்க்கையை அழிக்கின்ற முயற்சி மட்டுமின்றி பல்வேறு தவறான குற்றச்சாட்டுகளுடன், பொய்யான தவறான தகவல்களுடன் காவல் நிலையத்தில் புகார் அளிப்பதும், கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிப்பதும் பொய்யான ஆதாரங்களுடன் வழக்கு போடுவதும் என தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் தயாரிப்பாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே பெரிய முரண்பாட்டினை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதுமட்டுமின்றி அரசுக்கு சொந்தமான கலைவானர் அரங்கத்தில் புதிய சம்மேளனத்தை தயாரிப்பாளர்கள் சங்கம் துவங்க இருப்பதாகவும், அதில் தமிழக அரசின் அமைச்சர்கள் கலந்து கொண்டு அடையாள அட்டை வழங்க உள்ளதாகவும், சமூக வளைத்தளங்களில் தகவல் பரப்பி வருகிறார்கள். இது உண்மையா அல்லது பொய்யா என்பது எங்களுக்கு தெரியாது. ஆனால் 50ஆண்டுகளுக்கு மேலாக திரைப்பட தொழிலில் உயிரை கொடுத்து பணிபுரிந்து வரும் 25ஆயிரம் தொழிலாளர்களுக்கு எதிராக நடத்தப்பட உள்ள இந்த நிகழ்ச்சியில் ஒரு வேலை அவர்கள் கலந்து கொண்டால், அது தொழிலாளர்களுக்கு எதிராக அமையும் என்பதை தங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம்.
பெப்ஸி சார்பில் 7.4.2025 தேதியில் தங்களுக்கு இது குறித்து ஒரு கடிதம் எழுதி உள்ளோம். அன்புகூர்ந்து தயவு செய்து இந்த விஷயத்தில் அரசு தலையிட்டு தொழலாளர்கள் வாழ்வாதாரத்தை காத்து, தொழில் அமைதியை ஏற்படுத்துமாறு தங்களை பணிவன்புடன் 25ஆயிரம் குடும்பங்களின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் படப்பிடிப்பு அல்லாது Post Production, pre production போன்ற அனைத்து பணிகளும் நடைபெறாது. மேலும் 14.5.2025 அன்று காலை 9.00மணி முதல் மதியம் 1.00 மணி வரை சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் பெப்ஸி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும், கண்டன பொதுக்கூட்டமும் நடத்த முடிவு செய்துள்ளோம்.
திரைப்படத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் வகையில் துன்பத்தையும், துயரத்தையும் தந்திட நினைக்கும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஒரு சில நிர்வாகிகளின் தீய எண்ணத்தின் செயல்பாடுகளை தடுத்து,, தமிழ்த் திரைப்படத்துறையில் சுமூக நிலையையும், தொழில் அமைதியையும் ஏற்படுத்தி தந்திட வேண்டும் என மாண்புமிகு தமிழக முதல்வர் உயர்திரு.மு.க.ஸ்டாலின் அவர்களையும், மாண்புமிகு துணை முதல்வர் உயர்திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களையும் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் சார்பில் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
